சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பணம், பொருள்களை ஆவணங்களின்றி கொண்டுசெல்பவர்களைத் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஏ.கே. சமுத்திரம் ஆவுடையார் கோவில் அருகே உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் ராஜவேல் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் பொலிரோ காரை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் சென்ற ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முட்டை வியாபாரி பாரதியிடம் ஐந்து லட்சம் ரூபாய், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராஜேஷிடம் 65 ஆயிரம் ரூபாய், பச்சுடையாம்பட்டியைச் சேர்ந்த கோழி வியாபாரி பிரபுவிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட பணத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பணத்தைப் பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர், அதனை மாவட்டக் கருவூலத்தில் செலுத்தினார்.