நாமக்கல் மாவட்டத்தை அடுத்த வீசாணம் பகுதியில் மேம்பாலத்தில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் அவ்வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதேபோல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை உள்ளதால் பாலத்தை உயர்த்தித் தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ் ”நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று ஆரம்பக் காலத்தில் சற்று அதிகரித்த நிலையில் தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. ஆகவே பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதத்தில் டெங்குவால் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும், கொசு, புழுக்கள் உற்பத்தி ஆகாமலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளவேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்