நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருகூர் பஞ்சாயத்தில் பஞ்சப்பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு முருகேசன் - கவிதா என்ற தம்பதியினர் கூரை வீட்டில் வசித்துவருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு மீனா (18) என்ற மகளும் பெரியசாமி (13) என்ற மகனும் உள்ளனர்.
குடிசை வீட்டில் வசித்துவந்த இவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கு கான்கிரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தனர். அதனை ஆய்வுசெய்த அரசு அலுவலர்கள், முருகேசன் - கவிதா தம்பதியருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையில் முருகேசன் - கவிதா தம்பதியர் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளான அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அதன்பின் வீடு கட்டுவதற்கான எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் இந்தத் தம்பதிக்கு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை முருகேசன் - கவிதா தம்பதியினர் பலமுறை நேரில் சந்தித்தும் மனுக்கள் கொடுத்தும் கேட்டுள்ளனர். எனினும் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அலுவலரை சந்தித்தபோது தங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இனி உங்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்க இயலாது எனவும் கூறியதை கேட்டு முருகேசன் - கவிதா தம்பதியர் பேரதிர்ச்சியடைந்தனர்.
அதன்காரணமாக கடந்த திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், தங்களுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்காமலேயே வீடு கட்டி கொடுத்துவிட்டதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர் என முருகேசன் - கவிதா தம்பதியினர் புகார் மனு அளித்தனர்.