நாமக்கல் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடைபெற்றது. இப்பேரணியை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி,சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர்.சரோஜா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் பள்ளிமாணவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ,பயிற்சி செவிலியர்கள் என சுமார் 700பேர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பு ஏற்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் பிகில் இசைவெளியீட்டு விழாவில் பேசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
இதனையடுத்து சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பேசுகையில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த போசன் அபியான் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளை உருவாக்குவதும், ரத்தசோகை, குள்ளத்தன்மை, எடைகுறைதல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தடுப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். என்று தெரிவித்தார்.