நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் இளநிலை உதவியாளர்களாகத் தேர்ச்சி பெற்ற 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, " பொது மக்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கிய நிகழ்வுகளுக்கு இ- பாஸ் கிடைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரை அணுகலாம்.
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மாதம் ஒரு முறை மின்கணக்கீடு செய்யும் முறையைக் கொண்டு வரவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்ததால் தான் மின் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவருக்கு அவசர ஊர்தி வழங்காத விவகாரம்; மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!