நாமக்கல்: திருச்செங்கோடை அடுத்த செளதாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கவின், ரேவதி. இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது தொடங்கி, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததால், பெண்ணின் வீட்டில் பெரும் எதிர்ப்பு நிலவி வந்துள்ளது. எனினும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் (ஆகஸ்ட்.13) திருச்செங்கோடு வால்ரைகேட் ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர், உறவினர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் காதல் ஜோடிகள் இருவரும் நேற்று (ஆகஸ்ட்.13) நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூரை சந்தித்து பாதுகாப்பு கோரி புகார் மனு அளித்தனர்.
இம்மனுவில், ”நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர், உறவினர்களால் எங்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே எங்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.
இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு... கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவு!