தமிழகத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிமாநிலங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் லாரி ஓட்டுநர்களால் கரோனா பரவக் கூடும் என்ற அச்சத்தால் ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் லாரிகளை மாவட்ட எல்லைப்பகுதியில் நிறுத்தி லாரி ஓட்டுநர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வது மட்டுமின்றி லாரி ஓட்டுநர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், சரக்குகளுடன் வந்த லாரிகளை மாற்று ஓட்டுநர்களை வைத்து எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் இம்முடிவு குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் நாளை காலை முதல் ஈரோடு மாவட்டத்திற்கு சரக்கு லாரிகள் இயக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் லாரி உரிமையாளர்களின் இம்முடிவால் ஈரோடு மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்மேளன தலைவர் குமாராசாமி கூறுகையில், “அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காகவே லாரிகளை இயக்கி வரும் நிலையில் அரசின் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திற்குள் லாரிகள் வரும் போது ஓட்டுநர்களை இறக்கி விட்டு அவரை தனிமைப்படுத்தி விட்டு லாரிகளை வேறு ஓட்டுநர்கள் மூலம் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது சாத்தியமற்ற ஒன்று. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை முதல் ஈரோடு மாவட்டத்திற்குள் கனரக வாகனங்களை இயக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.