நாமக்கல் மாவட்டம், பரமத்தி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், சரவணன், கண்ணம்மாள், வசந்தி, கேசவன் ஆகியோர், தங்கள் வீட்டு ஒரு வயதுக் குழந்தை பிரஜினுக்கு மொட்டையடிக்க, திருச்சி மாவட்டம், துறையூருக்குச் சென்றுள்ளனர். அங்கே உள்ள அவர்களின் குலதெய்வக் கோயிலில் மொட்டை அடித்துவிட்டு, சொந்த ஊரான நாமக்கலுக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எருமப்பட்டியை அடுத்துள்ள மாணிக்கவேலூர் பகுதியைக் கடக்கையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரை ஓட்டிச்சென்ற ராஜேந்திரன் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்கையில், எதிரில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் குழந்தை பிரஜின் உட்பட, காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சரவணன், கண்ணம்மாள், கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தி, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.