இந்தியாவில் குறைந்தளவு எரிபொருள் திறன் கொண்ட பிஎஸ்-6 தரக் குறியீடு உள்ள வாகனங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களைவிட குறைந்த அளவில் மாசுவை கட்டுப்படுத்தும். இந்த வாகனங்களில் ப்யூவல் இன்ஜெக்டட் (FI) தொழில்நுட்பம் எஞ்ஜின்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள நாடு, இந்தியா. இங்கு கனரக வாகனங்களின் பயன்பாடும் அதிகமாக உள்ளன. இதனால் பிஎஸ்-6 வாகனங்களின் வரவு உண்மையில் நல்ல விசயம்தான். எதார்த்தத்தில் இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 350க்கும் மேற்பட்ட லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் உள்ளன.
ஒரு லட்சத்தும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை சார்ந்துள்ளனர். கூண்டு கட்டுதல், பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மரம் இளைப்பு என, லாரி கூண்டு கட்டும் தொழில் பெரிய நெட்வொர்க் போல செயல்பட்டுவருகிறது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் சிறு, குறு பட்டறை உரிமையாளர்கள் இப்பணியை மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இந்த நிலையில், கரோனா இவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
லாரி கூண்டு கட்டும் தொழில்:
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதியில் பிரதான தொழிலாக லாரி தொழில் விளங்கி வருகிறது. சரக்கு போக்குவரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் லாரி, தற்போது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன. பொது முடக்கத்தினால் பி.எஸ்-4 ரக வாகனங்கள் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த வாகனங்ககளை வாங்கியவர்கள் அதற்கென கூண்டு கட்டியப் பிறகு பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர். இதுகுறித்து, லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்கவேல் கூறுகையில், “கூண்டு கட்டிய லாரிகள் பட்டறைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதற்கான கூலியையும் உரிமையாளர்களிடம் பெறமுடிவில்லை.
ஒரு லாரிக்கு கூண்டு கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். கூண்டு கட்டுதல், பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மரம் இளைப்பு பட்டறை, கண்ணாடி பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் லாரி தொழிலை நம்பியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 தொழிற்கூடங்கள் இதை நம்பியுள்ளன.
இந்தத் தொழிற்கூடங்களை நம்பியவர்கள், தற்போது போதிய வருமானமின்றி தவித்துவருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரிகளுக்கு கூண்டு கட்டும் தொழிலில் ஈடுபட்ட வந்த பல சிறு, குறு நிறுவனங்கள் புதிய மோட்டார் வாகன சட்டத்தால் தொடர்ந்து செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தன. தமிழ்நாடு முழுவதும் இந்த தொழில் முடக்கத்தால், ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசிடம் இருந்து எங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை” என்றார்.
விடுப்பு கூட எடுத்துக் கொள்ளாமல், காலை முதல் இரவு வரை வேலை செய்த கைகளை கரோனா நெருக்கடி சோர்வடைச் செய்துள்ளது என, அலுத்துக் கொள்கிறார், மெக்கானிக் ஆறுமுகம். அவர் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். வாரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஈட்டி வந்த லாரி கூண்டு கட்டும் தொழிலில், தற்போது ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கே அல்லாட வேண்டியுள்ளது. இந்த நிலை நீடித்தால், எப்படி கடன்களை அடைப்பது, குடும்பத்தை நடத்துவது என தெரியவில்லை” என புலம்புகிறார் ஆறுமுகம்.
தனது 13 வயதில் இந்தத் தொழிலுக்கு வந்த செந்தில், “ கரோனா பாதிப்பால் பிஎஸ்-4 ரக வாகனங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது. தற்போது லாரி பராமரிப்பு பணிக்கு ஆட்கள் வருவதில்லை. இன்றையச் சூழலுக்குப் பி.எஸ் 6 ரக புதிய லாரிகள் எதுவும் வாங்காத நிலையில், கூண்டு கட்டும் தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. வேலையில்லாமல் பட்டறைகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், உரிமையாளர்கள் எங்களுக்கு கூலி கொடுக்க சிரமப்படுகின்றனர்” என்றார்.
லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் பல இடங்களில் இருந்தாலும், வலிமையாக லாரிகளுக்கு கூண்டு கட்டுவதற்காக லாரி உரிமையாளர்கள் நாமக்கல்லை நாடி வந்த நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தங்களுக்கும் இழப்பீடு வேண்டும் - வாடகை கார் ஓட்டுநர்கள் குமுறல்!