நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் கபிலக்குறிச்சி, கள்ளக்குறிச்சி ஊராட்சியில் 2 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவருக்கான ஏலம் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவியை கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் ரூ.35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளிபாளையம் ஊராட்சியை, பெரியசாமி என்பவருக்கு ரூ.20 லட்சத்து, 50 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த கிராம ஊராட்சியில் ஆயிரத்து 800 வாக்குகள் உள்ளன.
இதேபோல, வடகரையாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.30 லட்சத்துக்கும், சிறுநல்லிகோயில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.12 லட்சத்திற்கும் ஏலம் விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்று சட்டத்துக்கு புறம்பாக தொடர்ந்து நடக்கும் செயல்களை அலுவலர்கள் தடுத்து நிறுத்துவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் பதவி - கொம்பன் பட பாணியில் 15 லட்சத்திற்கு ஏலம்!