தமிழ்நாடு அரசு மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், 2017-2018, 2018 - 2019ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி முறையாக தரப்படவில்லை எனவும், இந்தக் கல்வியாண்டில் கல்வி பயில்வோருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுவருவதாகவும் முன்னாள் மாணவர்கள் பலர் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ராசிபுரம் நாமக்கல் சாலையில் செயல்படும் தேசிய பெண்கள் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதில் பள்ளியில் பயிலும் 200 மாணவிகளில் 140 பேருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி வகுப்பைப் புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும் மாவட்ட கல்வி அலுவலர்களும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் விடுபட்ட மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.