இன்று காலை முதல் மாநிலத்திலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்து மக்களும் மிகவும் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொல்லிமலை ஆரியூர்நாடு ஊராட்சி ஆரியூர் கஸ்பா பகுதியில் 115 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிக்கு சாலைவசதி செய்து தர கோரி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, அறிவித்தபடியே அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடிகளைக் கட்டி தேர்தலை புறக்கணித்தனர். வருவாய் மற்றும் காவல்துறையினர் கொல்லிமலை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உடன்படவில்லை. கொல்லிமலையில் 240 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.