கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள வாகன சோதனை சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு, உதவி ஆய்வாளர் வில்சன், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து தமிழ்நாடு முழுவதும் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாமக்கல் -கரூர் மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப் பாலமான பரமத்தி வேலூரில் உள்ள வாகன சோதனை சாவடியில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் ஒவ்வொன்றாக நிறுத்தி இரவு முழுவதும் தீவிரமான சோதனை மேற்கொண்டனர்.
இந்த வாகன சோதனையின்போது வாகனங்களின் பதிவு எண்கள், உரிமையாளர்களின் முகவரி, எங்கிருந்து பயணம் செய்கிறீர்கள் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினர் சேகரித்தனர்.
தொடர்ந்து சோதனை சாவடி அருகே மணல் மூட்டைகளை அடுக்கி, துப்பாக்கி ஏந்தி, பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மாவட்டத்திலுள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிரமாக வாகன தணிக்கையிலும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு!