இந்திய அரசியல் நிர்ணய சபை குழு உறுப்பினர்களில் வாழும் உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், இந்திய முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான டி.எம்.காளியண்ண கவுண்டரின் 100ஆவது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இவ்விழாவில் அமைச்சர் தங்கமணி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி, திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் பரமத்தி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி, முன்னாள் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிமுத்து, திருச்செங்கோடு நகர பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்தனர்.
![மாலை அனிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-05-kaliyannakounder-100th-birthday-script-vis-7205944_10012020205811_1001f_1578670091_154.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ’முதுபெரும் தலைவரான டி.எம். காளியண்ண கவுண்டர், தனது 28ஆவது வயதில் சட்ட மேதை அம்பேத்கா் பங்குகொண்ட இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் உறுப்பினராகப் பதவி வகித்தவர். மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், சட்டமேலவை உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆயிரம் பள்ளிகளைத் திறந்த பெருமை இவருக்கு உண்டு. சுதந்திரப் போராட்டத்தையொட்டி, காந்தியடிகளின் சபா்மதி ஆசிரமத்தில் 10 நாள்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்றவா். அவரது 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நேரில் சந்தித்து முதலமைச்சர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம்.
திருச்செங்கோடு பகுதி மட்டுமல்லாமல் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் முதன்மையாக வருவதற்கு வித்திட்டவர் ,மேட்டூர் உபரிநீர் இந்த இரு மாவட்டங்களுக்கு கொண்டுவர பாடுபட்டவர். மத்திய அரசு இவரை நாடாளுமன்றத்திற்கு நேரில் அழைத்து பாராட்ட இருந்த நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பாராட்டு சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முதலமைச்சர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். அவரின் கனவுத் திட்டமான காவிரியுடன் திருமணிமுத்தாற்றை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு சேலம் மாவட்டத்தில் தற்போது நிறைவேற்றியுள்ளது. படிப்படியாக நாமக்கல் மாவட்டத்திலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இதையும் படிங்க: 75 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர்: மூதாட்டியை பல்லக்கில் தூக்கிக் கொண்டாடிய மக்கள்!