நாமக்கல்: கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜை, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கொலை செய்த வழக்கில் குற்றவாளி யுவராஜ் உட்பட 10 பேருக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுங்காவல் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் யுவராஜ் தரப்பினர் திருச்செங்கோடு மலை கோயிலில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் முறையாக ஆய்வு செய்யவில்லை என குற்றம்சாட்டியும், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய மீதி ஐந்து நபர்களுக்கும் கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் எனவும்; அவர்களை விடுதலை செய்தது தவறு எனவும் கோகுல் ராஜின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகின்றனர். வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, கோகுல் ராஜ் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், தான் திருச்செங்கோடு மலை கோயிலுக்கு செல்லவே இல்லை என்றும், பிறழ் சாட்சி கூறியதை அடுத்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் நேரில் சென்று விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று(ஜன.21) நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ் மற்றும் ரமேஷ், திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு வருகை தந்து கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மேற்கு புறம் வாயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் கோணங்கள் மற்றும் மலைக்கோயிலில் உள்ள சிசிடிவிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். மேலும் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகள் மற்றும் கோயில் அதிகாரிகளிடம் சிசிடிவி குறித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:தங்கை மீது ஆசிட் வீசிய அக்கா.. வெளியான பகீர் காரணம்?