மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவண்ணாமலை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, அனைத்து முஸ்லிம்கள் இயக்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
விருதுநகரில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முன்றனர். அப்போது காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசியக் கொடியுடன் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல்:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்தும் நாமக்கல்லில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் பெண்கள் உள்பட சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோயம்புத்தூரில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் பேரணி