நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் காரணமாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். பல இடங்களில் வேட்பாளர்கள் நூதன முறையில் பரப்புரை செய்து வாக்காளர்களைக் கவர்ந்துவருகின்றனர்.
நாமக்கல் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.டி. சரவணன் தனது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் தீவிர பரப்புரை மேற்கொண்டார். திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது சாலையோரம் உள்ள டிபன் கடைக்குச் சென்ற அவர் பரோட்டா போட்டார். பின்னர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். மேலும், தான் ஒரு எளிமையான வேட்பாளர் என்றும், தனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு அளித்து பார்க்குமாறும் கூறினார்.
இவரது புரோட்டா சுடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன. நூதனமான முறையில் அவர் செய்த வாக்குச் சேகரிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புரோட்டா ஓட்டுகளாக மாறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகி காருக்கு தீவைத்த விஷமிகள்: நாகையில் பரபரப்பு