ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாமக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சத்தியமூர்த்தியின் மகன்களான பாபு, அரவிந்த் ஆகியோர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் தொடங்கினர்.
இந்நிறுவனம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அரசின் சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம், மேம்பாலங்கள், அரசு பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பல கோடி மதிப்பில் தொடர்ந்து செய்து வருகிறது. இத்துடன் நட்சத்திர விடுதி, கோழிப்பண்ணை, சொகுசு கார் விற்பனை ஷோரும் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாபு, அரவிந்த் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து இன்று (அக்.28) நாமக்கல் சூர்யா கார்டனில் உள்ள சத்தியமூர்த்தியின் பங்களா வீடு, கந்தசாமி நகரில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று (அக்.28) சோதனை மேற்கொண்டனர். அதில், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.