நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர், கதிரவன்(52). இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார். கதிரவன் சுனாமியின்போது சிறப்பு துணை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்கள் நலத்திட்டங்கள் பெற உதவியுள்ளார்.
இவர் 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வுபெற்று, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும் சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் இருந்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பதவி ஏற்றார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தின் 33-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியபோது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
மேலும், கதிரவன் சேலத்தில் உள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குநர் பதவிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு சாலை மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இன்று தான் கதிரவன் சாலை மேம்பாட்டுத்துறையின் இயக்குநராக பொறுப்பேற்க இருந்தார். இதற்காக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று மாலை அவரது சொந்த ஊரான காந்திபுரத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட உள்ளது. புதிய இலாகாவில் பொறுப்பேற்க இருந்த நாளிலேயே ஐஏஎஸ் தரவரிசை அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதையும் படிங்க: Etv Bharat Impact: வேலூர் ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்!