நாமக்கல்: வள்ளிபுரம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு கோவையிலிருந்து கார் மூலம் வந்த ஒரு குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றனர்.
அதில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு இன்று (ஜனவரி 28) பிறந்த நாள். அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் கணவரின் மறைமுக ஏற்பாட்டின் பேரில் கோவையிலிருந்து நாமக்கல்லுக்கு வந்த ஹெலிகாப்டர், நாமக்கல்லிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தரையிறங்கிக் காத்திருந்தது.
பிறந்த நாள் கொண்டாடும் பெண் ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கேயே கேக் வெட்டிய நிலையில் அவரும், உடன் வந்தவர்களும் முதன் முதலாக ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு சென்றார். தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதை கண்ட சுற்று வட்டார பொதுமக்கள், அதன் முன் நின்று ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல்லில் இருந்து கோவைக்கு பிளானட் எக்ஸ் (PLANET X), ஏரியல் ரோபோடிக்ஸ் (AERIAL ROBOTICS) ஆகிய நிறுவனங்கள் விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான சோதனை ஓட்டமும் தொடங்கியிருப்பதாகவும் அந்நிறுவனங்களின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிராமங்கள் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தநாளுக்கு, ஹெலிகாப்டர் பயணம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திகைப்படையச் செய்தது. தங்களது முதல் ஹெலிகாப்டர் பயணம் புதிய அனுபவமாகவும், மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.