திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35). இவர், சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இவர், நாமக்கல் மாவட்டம் முடாஞ்செட்டியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் கனிமொழியிடம், அவரது மகனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பணம் பெற்றுக்கொண்ட சதீஷ்குமார் கூறியதுபோல வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதனை உணர்ந்த கனிமொழி, நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையிடம் சதீஷ்குமார் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கனிமொழி மட்டுமின்றி இதுபோல் பலபேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இதுவரை 37 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சதீஷ்குமாரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அரசுப் பணிகளில் சேருவதற்குப் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் முறைகேட்டில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது நீதிமன்றத்திலும் பணம் கொடுத்து பணியில் சேர முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மயக்கும் பெண் குரல்... மயங்கிய ஆண்கள்... திணறிய காவல்துறை...!