தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிய தனி கட்டட வசதி, காலியாக உள்ள 88 கண்காணிப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி- ஊரக வளர்ச்சி-கூட்டுறவு உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவதைப் போல பிற துறைகளிலும் அமைச்சுப் பணியாளர்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்றும் தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள சுமார் இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.