கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, "நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படாதவாறு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து உடனுக்குடன் தேவையான அளவு குடிநீர் வழங்கிட வேண்டும்" என அறிவுறுத்தினார்.
அமைச்சர் தங்கமணி பேசிய காணொலி இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்பை பயன்படுத்தி வந்தால் அதனை துண்டிக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளுக்கு தேவைப்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது. கரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் உள்ளது. மாவட்டத்தில் 22 பகுதிகள் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்த நிலையில், அதில் 21 இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஓரிடம் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது.
விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கும். இலவச மின்சாரம் ரத்து என கூறி போராட்டம் நடத்துபவர்கள் அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்பு குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்!