நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் ஏகேஇ தெருவில் வசித்து வருபவர் செந்தில் (46). இவருக்கு சாந்தி (38) என்ற மனைவியும் சுருதிகா(14) என்ற மகளும் மாதேஸ்வரன்(10) என்ற மகனும் உள்ளனர்.
செந்தில் தனது வீட்டின் பின்புறத்தில் எட்டு விசைத்தறிகள் கொண்ட பட்டறை வைத்து, கூலிக்கு நெசவு செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று நண்பகல் சுமார் மூன்று மணியளவில் செந்தில் தனது குடும்பத்தினருடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களுக்கு அருகே பருத்தி செடிக்கு பயன்படுத்தப்படும் போஸ்கில் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்களை மீட்ட அண்டை வீட்டார், நான்கு பேரையும் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி செந்தில் உயிரிழந்தார். மீதமுள்ள மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுக்குறித்து திருச்செங்கோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் செந்திலுக்கு ஐந்து லட்சம் கடன் இருந்ததாகவும், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த செந்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
குப்பைக் கிடங்கை சுத்தம் செய்ய விடப்பட்ட டெண்டரில் முறைகேடு - ஆர்டிஐ அம்பலம்!