நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.
ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 95 ஆயிரத்து 840 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 469 பேர், 3ஆம் பாலினத்தவர் 138 பேர் என மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த புதிய வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 32 ஆயிரத்து 213 பேர், நீக்கம் செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 496 பேர் ஆவர்.
புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் அடையாள அட்டை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும். மேலும் இந்த பட்டியலில் இடம்பெறாதவர்கள், புதிதாக பெயர் சேர்க்க பட்டியல் திருத்தப்பணியின் போது விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் ஆணைய உத்தரவின் படி துணை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அரசியல் கட்சியினரும் உதவ வேண்டும் எனவும் ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.