தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் திருவிழா 2021 நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விவசாயிகளை பாராட்டி விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பேசுகையில், "உலகத்திலுள்ள தொழில்களிலேயே வேளாண் தொழில் முதன்மையாக இருப்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரே புகழ்ந்துள்ளார்.
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விவசாயத்துறை இருந்து வருகிறது. இப்பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை மத்திய-மாநில அரசுகள் அளித்து வருகின்றன.
இது போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படுவதன்மூலம் புதிய வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய இளைஞர்கள் வேளாண் தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
சுற்றுச்சூழலையும் நிலத்தையும் பாதுகாக்கும் வகையில் இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறிவருவதால், இயற்கையான-ஆரோக்கியமான வேளாண் விளை பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க முடிகிறது" என்றார்.
இதையும் படிங்க: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலம்...!