காலத்திற்கு ஏற்றார் போல நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்து, விலை படிப்படியாக உயரத் தொடங்கி, உச்சகட்டமாக வெங்காயம் கிலோ 100 ரூபாயைத் தாண்டியது.
இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நல்லுசாமி, இந்தாண்டு சின்ன வெங்காயத்திற்குப் பதிலாக பெரிய வெங்காயத்தைப் பயிரிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகளவில் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதனிடையே, பல்லடம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்த அளவு பெரிய வெங்காயமும் பயிரிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நல்லுசாமியும் ஆண்டுதோறும் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடுவார்.
ஆனால் இந்தாண்டு 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் பெரிய வெங்காய சாகுபடிக்கு மாறிவிட்டார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பெரிய வெங்காயத்தை பயிரிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தனது 6 ஏக்கர் விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம், நெல், நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்துவந்த நிலையில், இந்தாண்டு பெரிய வெங்காயத்திற்கு அதிகளவு தேவை இருக்கும் எனக் கருதி பெரிய வெங்காயத்தை நடவு செய்ததாகத் தெரிவிக்கிறார், நல்லுச்சாமி.
”பெரிய வெங்காயம் 150 நாள் பயிர். தண்ணீரும் அதிகமாகத் தேவைப்படும். தட்பவெப்பநிலையைக் குறித்து நாம் கணக்கிட முடியாது ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் குறைந்தளவே இச்சாகுபடி நடக்கும்” என விவசாயி நல்லுசாமி தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்.
முதல்முறையாக பயிரிடுவது ஏற்படுத்தும் பதற்றம் குறித்து கேட்டபோது, ”தமிழ்நாட்டிலுள்ள தட்ப வெப்பநிலை மாற்றங்களால் நாற்றாங்களில் 45 நாள்கள் வெங்காயத்தை வளர்க்கும்போது கருகும் நிலை ஏற்படுகிறது. நடவிற்கு பின்னர் 95 முதல் 100 நாள்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதனால் விவசாயிகள் பெரிய வெங்காயத்தை சாகுபடி செய்திட விரும்புவதில்லை. வருவது வரட்டும் என மனப்பாங்கில் இந்தாண்டு சோதனை முறையாகப் பெரிய வெங்காயம் சாகுபடி செய்துவிட்டேன்” என்றார்.
விளைச்சல் நன்றாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவிக்கும் நல்லுசாமி, தற்போது சில்லறையில் பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்றாலும் கூட விவசாயிகளுக்கு 40 விழுக்காடு விலை தான் கிடைக்கிறது. இடைத்தரகர்கள் அதிகளவு பதுக்கிவைத்து லாபம் பார்க்கிறார்கள் என வேதனைத் தெரிவித்தார்.
வெங்காயத்தை கள்ளச்சந்தையில் பதுக்குவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியான நடவடிக்கைகள் தான் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
இதையும் படிங்க:பண்டிகை காலங்களில் உயரும் வெங்காய விலை: யாருக்கு லாபம்?