நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 75 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி, 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்தும், 2ஆம் தேதி 5 காசுகளும், 3ஆம் தேதி 5 காசுகளும் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 75 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று (ஜூன் 4) மீண்டும் 5 காசுகள் உயர்ந்து, 3 ரூபாய் 80 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், 'பொது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் உணவகங்கள் திறக்கப்பட்டதால், முட்டை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து, விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் முட்டை விற்பனை அதிகரித்து தேவை ஏற்பட்டதால் நாமக்கல் மண்டலத்திலும் விலை அதிகரித்துள்ளது. இவ்விலை மேலும் சிறிதளவு உயர வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்தனர்.