பிப்ரவரி 16ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 21 காசுகளாக இருந்த நிலையில் கோழிக்கறி, முட்டைகள் சாப்பிடுவதன் மூலம் கரோனா நோய் பரவுகிறது என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலால் முட்டை, கோழிக்கறி விலை வரலாறு காணாத அளவு விலை வீழ்ச்சி அடைந்தது.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 21 காசுகளாக இருந்து வேகமாக ஒரு ரூபாய் 95 காசுகளாகச் சரிந்தது. இதனால் 30 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்த நிலையில், கோழிப்பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியையும் படிப்படியாக குறைத்த நிலையில் விற்பனை அதிகரித்து தேவை ஏற்பட்டதால் விலை தற்போது சற்று உயர்ந்துள்ளதாகவும், வரும் நாள்களில் விற்பனை தேவையின் அடிப்படையில் விலை உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த 18ஆம் தேதி கோழி உயிருடன் ஒரு கிலோ 17 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி குறைந்தது. தற்போது அதன் விற்பனையும் அதிகரித்த நிலையில், விலை வேகமாக உயர்ந்து உயிருடன் ஒரு கிலோ கோழி 55 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால் கோழி இறைச்சி விலை வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: '24 மணி நேரத்தில் 462 உயிர்கள்'- நிலை குலைந்த ஸ்பெயின்!