உங்கள் கட்டளைகளை நிறைவேற்றவே நான் உள்ளேன்- உணரச்சிப்பூர்வமடைந்த எடப்பாடி - இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை
மக்களின் கட்டளைகளை நிறைவேற்றவேதான் முதலமைச்சராக உள்ளேன் என நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "கிராமமும் நகரத்தை போல் மாறி வந்துகொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் முன்னிலை வகிக்கும் இம்மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
நாமக்கல், சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதே நான் பொறுப்பில் இருந்தேன். என்னுடைய தாய் மாவட்டத்தில் இருந்துதான் நாமக்கல் மாவட்டம் பிரிந்துள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் முதலமைச்சர். நீங்கள் கட்டளையிடும் பணியை செய்யவே நான் உள்ளேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் கிடைக்க பெறும் சிகிச்சைகள், தற்போது கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு தேவையானதை இந்த அரசு செய்துகொண்டுள்ளது.
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் அதிமுக. ஆனால், எடுத்து எடுத்து பழக்கப்பட்ட கரங்கள் திமுகவினுடையது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை கூறுவதுதான் ஸ்டாலினின் பழக்கம். ஸ்டாலின் விவசாயிகள் குறித்து தரக்குறைவாக பேசிவருகிறார். விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு விவசாயிகளை அவமானப்படுத்துகிறார்.
தற்போதைய அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா, புயல் என அனைத்தையும் எதிர்கொள்வதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பல துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடியாக விளங்குகிறது” என்றார்.
இதையும் படிங்க: நாமக்கல் சாலையோர வியாபாரிகள் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு