நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அண்ணாசாலை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பணியாற்றும் தலைமையாசிரியர் மாதேஸ்வரனுக்கும் ஓவிய ஆசிரியர் செந்தில் முத்துக்குமாருக்கும் ஏற்கனவே பணி தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி நேரத்தில் ஓவிய ஆசிரியர் செந்தில்முத்துக்குமார் குடிபோதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தலைமையாசிரியர் மாதேஸ்வரன் கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குடிபோதையில் வந்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமையாசிரியர் மாதேஸ்வரன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பள்ளிக்கு வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஐயராகவன், ஆசிரியர் செந்தில்முத்துக்குமாரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து, ஆசிரியர் செந்தில்முத்துக்குமார் கூறுகையில், ’தான் விடுப்பு கேட்கவே பள்ளிக்கு வந்ததாகவும் தன்னை பழி வாங்கும் நோக்கில் தலைமையாசிரியர் செயல்படுவதாகவும்’ குற்றஞ்சாட்டினார். அரசு பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதால், அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
மாணவர்களை நல்வழிப்படுத்தி, ஒழுக்க நெறிமுறைகளை கற்றுகொடுத்து வழிநடத்த வேண்டிய ஆசிரியரே இம்மாதிரியான தவறான செயலில் ஈடுபடுவது மாணவர்கள் மத்தியில் எந்தமாதிரியான மனநிலையையும், சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து நடத்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.