நாமக்கல்: இந்திய மருத்துவச் சங்கத்தின் நாமக்கல் கிளை சார்பில் நேற்று (ஜூன் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மருத்துவர் சதீஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உடனடியாகத் தேசிய அளவில் மருத்துவர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, வலியுறுத்தி வருகிற 18ஆம் தேதி அனைத்து மருத்துவர்களும் கறுப்புப் பட்டை அணிந்து பணி செய்ய உள்ளோம். கடந்த ஆண்டு கரோனாவால் 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தாண்டு கரோனாவால் 680 மருத்துவர்களும், தமிழ்நாட்டில் மட்டும் 37 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசிடம், மாநில அரசு கோரிக்கைவைத்துள்ளதை வரவேற்கிறோம்.
இந்திய அளவில் ஒரே கல்விக் கொள்கையைக் கொண்டுவரவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 80 விழுக்காடு மாணவர்கள், மாநில வழிக்கல்வியிலேயே பயின்றுள்ளனர். மாநிலத்திற்கு, மாநிலம் கல்விக் கொள்கையில் வேறுபாடு இருக்கும்போது நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இதையும் படிங்க: அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி பெற முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி