நாமக்கல்: நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் பூங்கா சாலையில் இன்று (மார்ச் 29) பரப்புரையில் ஈடுப்பட்டார். பரப்புரையில் உதயநிதி பேசுகையில், "நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எம்பியை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த நீங்கள் இந்தத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு முன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், மக்களைத் தவிக்கவைத்தவர் மோடி. புதிய இந்தியாவை உருவாக்குவேன் எனக் கூறிய மோடி ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்ன மோடி 15 காசுகள்கூட போடவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பணி ஒன்றும் தொடங்கவில்லை. மோடி உட்காரச் சொன்னால், முட்டிப் போடச் சொன்னால் அனைத்தையும் செய்பவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா காலில் விழுந்து அவரது காலையே வாரிவிட்டவர் பழனிசாமி.
ஒவ்வொரு தொதிகளிலும் கருணாநிதி இருப்பதுபோல் நினைத்து திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அடகுவைத்த நமது உரிமைகளை மீட்க திமுகவை ஆட்சியில் அமரவைத்திட வேண்டும்.
காவிரி உபரிநீரை திருமணிமுத்தாற்றுடன் இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். திமுக தலைவரின் மகனாகவும், கருணாநிதியின் பேரனாகவும் கேட்கிறேன், திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: நாளை தாராபுரத்தில் மோடி பரப்புரை!