வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலரின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கருத்து கேட்பு நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள்,விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
அப்போது "நாமக்கல் மாவட்டத்தில் 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள காவிரியின் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைத்து கால்வாய் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை நிரப்பும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
விவசாய பணிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் எரிவாயு குழாய் எடுத்துச்செல்லும் திட்டங்களை மாற்று பாதையில் செயல்படுத்திட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் அறிக்கை தயாரிக்க மும்முரம் காட்டும் திமுக