நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் தட்பவெப்ப நிலை மாறியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல், அலங்காநத்தம், வளையப்பட்டி, பரமத்திவேலூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 125 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலையைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரும் நாமக்கல் அன்புநகரைச் சேர்ந்த ஆர்யா என்ற 5 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செல்லம்மாளின் மகள் மேரி கூறுகையில், ‘கடந்த ஏழு நாட்களாக காய்ச்சல் அவதிப்பட்டு வந்தேன். நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
இதேபோன்று, ஐந்து வயது சிறுவன் ஆர்யாவிற்கும் கடந்த எட்டு நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. டெங்கு இருப்பது உறுதியானதையடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக ஆர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.