நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ராகவேந்திரா தெருவில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார் ஈரோடு மாவட்டம் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (48). அவரை சந்திக்க அவரது சக தொழிலாளி வந்தபோது, அவரது அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அவர், உடனடியாக விடுதியின் காப்பாளருக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் விடுதியின் காப்பாளர், குமாரபாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் சிம்மா, கைரேகை நிபுணர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொலை நடந்த இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசு, திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் பொறுப்பு பழனிச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொலையில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறோம். தற்போது வெண்ணிலா என்ற பெண்ணிடம் குமாரபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
கூலித் தொழிலாளி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.