நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமையான இன்று நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், ஆண்டாபுரம், களத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்த 10 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கடந்த வாரம் ஏலம் எடுத்த எட்டு பருத்தி மூட்டைகளை கூட்டுறவு சங்க நிர்வாகம் தங்களுக்கு ஒப்படைக்காத வரை யாரும் பருத்தி ஏலம் எடுப்பதில்லை என ஒருமித்த முடிவுடன் வியாபாரிகள் அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கும், வியாபாரிகளுக்கும் உள்ள பிரச்சனையில் தங்களை வஞ்சிப்பதை கண்டித்து நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக பருத்தி ஏலம் நடைபெற நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து 4 மணி நேர தாமத்திற்கு பிறகு வியாபாரிகள் பருத்தி விலை நிர்ணயம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம்