உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கரோனா தொற்றை விட 'இந்தக் காரணங்களால் தான் கரோனா பரவுகிறது' என்ற எண்ணம் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல கட்டுப்பாட்டுகளை விதித்து வாழந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் கோழி இறைச்சி சாப்பிட்டால் கரோனோ வைரஸ் தாக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பீதியை கிளப்பினர். இதனால் அச்சமடைந்த அசைவ பிரியர்கள், கோழிக்கறியையும் முட்டையையும் அன்றாட உணவில் அறவே ஒதுக்கினர். இதற்கிடையில் கறிக்கோழி மற்றும் முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து, அந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் கடந்த சில நாட்களாகவே நட்டத்தை மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். பொதுமக்களின் இந்த அச்சத்தைப் போக்க முடிவெடுத்த இவர்கள், பல்வேறு நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக சிக்கன் வறுவல் வழங்கி வருகிறார்.
![கடைக்கு வாங்க! கறி வறுவல் சாப்பிட்டு போங்க! - அழைக்கும் கடை உரிமையாளர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-special-story-corona-issue-free-chicken-script-vis-7205944_16032020154113_1603f_1584353473_1022.jpg)
இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், "கரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலம் மனிதனுக்கு பரவாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, 100 கிலோ கோழி இறைச்சி மூலம் சிக்கன் வறுவல் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். இதனால் நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் மேலும் மூன்று நாட்கள் இலவசமாக வழங்கவுள்ளோம்" என்றார்.
மணிகண்டனை போலவே இதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரும் கோழி இறைச்சி மூலம் கரோனா வைரஸ் பரவாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது இறைச்சி கடையில் மூன்று கிலோ கோழி இறைச்சியை 99 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
![3 கிலோ கோழிக்கறி 99 ரூபாய் மட்டுமே! - விளம்பரம் செய்யும் சத்தியராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-special-story-corona-issue-free-chicken-script-vis-7205944_16032020154113_1603f_1584353473_76.jpg)
இதுகுறித்து பேசிய சத்தியராஜ், "பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 கிலோ கோழி இறைச்சி 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கோழிகளை கொள்முதல் செய்த விலைக்கே விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
![வறுவலுக்கு தயாரான கோழி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-special-story-corona-issue-free-chicken-script-vis-7205944_16032020154113_1603f_1584353473_578.jpg)
இவர்களது இச்செயலுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் வழக்கத்தை விட இருவரின் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய நபரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.
![Corona Virus Rumors - poultry owners give free chicken](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-special-story-corona-issue-free-chicken-script-vis-7205944_16032020154113_1603f_1584353473_334.jpg)
ஆனால் அவர் பரப்பிய வதந்தி மட்டும் தற்போது வரை இருக்கத்தான் செய்கிறது. இதனால் மிகப்பெரிய இழப்பை சந்தித்த கோழி இறைச்சி விற்பனையாளர்களின் இச்செயல்கள் கறிக்கோழி மற்றும் முட்டை விற்பனை மீண்டும் ஏறுமுகத்தை அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!