நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி மேம்பாலத்தில் மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடியில் பரமத்திவேலூர் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக கரூர் மாவட்டத்திலிருந்து வந்த ஆம்னி வேனை மறித்து உள்ளே இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து சென்னைக்கு செல்வதாகவும் உறவினர் ஒருவர் இறந்ததால் இறுதி நிகழ்வுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாகனத்தில் மூன்று பேர் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் காரில் ஐந்து பேர் பயணம் செய்ததால் காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.
இதேபோல் மற்றொரு காரும் கரூர் மாவட்டத்திலிருந்து சென்னை சென்றபோது மறித்து சோதனை செய்ததில் இரண்டு பேர் பயணம் செய்ய மட்டும் அனுமதி கடிதம் பெற்ற நிலையில் அதில் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர்.
பின்னர் அனுமதி உள்ளவர்களை அனுப்பிவைத்துவிட்டு மீதம் இருந்த நால்வரையும் காவல் துறையினர் கரோனா பரிசோதனை செய்ய தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பரமத்திவேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.