நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற பெண் செவிலி அமுதா பேசிய ஆடியோ கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ராசிபுரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற பெண் செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஓட்டுநர் முருகேசன், பர்வீன், அருள்சாமி, ஹசீனா, செல்வி, லீலா ஆகிய எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், வழக்கின் தன்மையை கருதி தமிழக டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிபிசிஐடி காவலர்கள் கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குழந்தைகளை வாங்கியதாக கூறப்படும் பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொல்லிமலையைச் சார்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ராணி, இளையராணி, தனலட்சுமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாளை ரவிச்சந்திரன், முருகேசன், அருள்சாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தின் ஒப்புதலை இன்று கேட்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.