நாமக்கல்லை அடுத்த வகுரம்பட்டி, பெரமாண்டாம்பாளையம், குட்லாம்பாறை, லத்துவாடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு கோழிப்பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாமக்கல் ஆட்சியர் மெகராஜ்க்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமாரிடம் ஆட்சியர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோழிப்பண்ணைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுரம்பட்டி பகுதி கோழிப்பண்ணையில் பணியில் இருந்த 12 சிறுமிகளையும், குட்லாம்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணையில் பணியில் இருந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகளையும், பெரமாண்டாம்பாளையம் பகுதி கோழிப்பண்ணையில் பணியில் இருந்த மூன்று சிறுவர்களையும், லத்துவாடி பகுதி கோழிப்பண்ணையில் பணியில் இருந்த 13 சிறுமிகளையும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மீட்டனர்.
மீட்கப்பட்ட 35 குழந்தைத் தொழிலாளர்களையும் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருந்து மாதம் 9 ஆயிரம் சம்பளம், மூன்று வேளை உணவு, தங்குவதற்கு இலவச இடம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளைக் கொடுத்து அச்சிறுவர், சிறுமியரை பணிக்கு அழைத்து வந்ததுடன், அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி உரிய சம்பளம் வழங்காமல், மாதம் 1,500 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததும், போதிய அடிப்படை வசதிகள்கூட செய்து தராததும் அலுவலர்களின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து குழந்தைத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத் தொகை, அவர்கள் சட்டீஸ்கர் மாநிலம் செல்வதற்கான போக்குவரத்து செலவு ஆகியவற்றைப் பெற்று பாதுகாப்பாக 35 பேரும் சட்டீஸ்கர் மாநிலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அலுவலர்கள் தெரிவித்தனர்.