நாமக்கல், சேலம் சாலையில் இயங்கிவருகிறது 'படையப்பா பரோட்டா கடை'. இங்கு பரோட்டா மாஸ்டராக பணிபுரிபவர் ஞானசேகரன். அதே உணவகத்தில் சப்ளையராக பணிபுரிபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் நேற்று வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், பரோட்டா மாஸ்டர் ஞானசேகரன் போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 8 மணியளவில் அவர் சப்ளையர் கிருஷ்ணமூர்த்தியிடம் வேலை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி அதனை மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், பரோட்டா மாஸ்டர் ஞானசேகரன் தான் வைத்திருந்த கத்தியால் சப்ளையர் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில், ரத்தவெள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி சரிந்தார். அப்போது அங்கு உணவகத்தில் சாப்பிட்டு இருந்தவர்கள் இதனைக் கண்டு அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
பின்னர், அங்கிருந்தவர்கள் சப்ளையர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், தப்பியோடிய பரேட்டா மாஸ்டர் ஞானசேகரனை தீவரமாகத் தேடி வருகின்றனர்.