நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வரும் மத்திய அரசு திட்டப் பணிகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். முன்னதாக நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக் கிடங்கை மத்திய அமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
அப்போது, பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படாத வகையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, வள்ளிபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலக மற்றும் அங்கன்வாடி மைய கட்டடங்களின் கட்டுமானப் பணியை பார்வையிட்டார்.
பின்னர், வள்ளிபுரம் அருகே உள்ள புலவர்பாளையத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதையும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: ’ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது’ - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
அப்போது கட்டுமானப் பொருட்களின் தரம், நிதி விடுவிப்பு ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் நாமக்கல்லில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனையை முன்னிட்டு பாஜக மருத்துவப் பிரிவு சார்பில் நடந்த ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, "மதுரை, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு மத்திய அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்து உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், அந்த திட்டங்களுக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, இது குறித்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் குழுவை கொண்டு ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாட்னாவில் எதிர்கட்சிகள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது முதல் முறையல்ல என்றும், அவர்களால் பிரதமர் வேட்பாளரைக் கூட முன்னிறுத்த முடியாது எனவும், அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய மாட்டார்கள் எனவும் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதையும் படிங்க: மகளின் காதலனை கொலை செய்ய தந்தை திட்டம்.. 6 பேர் சிக்கியது எப்படி?