நாமக்கல், நாமகிரிப்பேட்டை, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் கொடியேற்று விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நேற்று (நவ. 12) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கலந்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், அண்ணா நகரில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழா, ரெட்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரமுகர் ஒருவரது வீட்டின் புதுமனைப் புகுவிழா, நாமக்கல் தனியார் உணவகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா, நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கோயில் கட்டும் பணி, பரமத்திவேலூரில் செல்போன் கடைத் திறப்பு விழா எனப் பல நிகழ்ச்சிகளிலும் உதயநிதி நேற்று பங்கேற்றார்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாகவும், கரோனா விதிமுறைகளையும் மீறியும் இந்த இடங்களில் கூட்டம் கூடியதாகக் கூறி, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் ராஜேஷ்குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 500 பேர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.