நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ச்செல்வி என்பவர் தனது மகன், மகள் ஆகியோருடன் தனது காரில் வந்துள்ளார். அந்த காரை ஓட்டலுக்கு அருகில் நிறுத்திய தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த ஏழரை சவரன் நகையை தனது கைப்பையில் வைத்து காரிலேயே விட்டுச்சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர், காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். பின்னர், காரை சுற்றி வந்த ஒருவர் தன்னுடைய கையில் வந்திருந்த வில் போன்ற பொருளினால் காரின் கண்ணாடியை உடைக்க, அதில் இருந்த கைப்பையை இருவரும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்(சிசிடிவி) பதிவாகியுள்ளது.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து தன்னுடைய காருக்கு திரும்பிய தமிழ்ச்செல்வி, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருடர்கள் ஊக்கு, ரப்பர் பேண்ட், சாக்லேட் காகிதம், இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பால்ரஸ் ஆகியவை வைத்து வில் போன்ற பொருளினை தயாரித்து காரின் கண்ணாடியை நோக்கி அடைத்தவுடன் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.