வங்கிகள் ஒருங்கிணைப்பைக் கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும், வங்கிகள் தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், வங்கிகளின் லாபத்தை வாராக் கடனில் வரவு வைப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், 2017ஆம் ஆண்டு காலாவதியான ஊதிய ஒப்பந்தம் இரண்டரை ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாத நிலையில், வங்கி தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்றார்.
மத்திய அரசும், இந்திய வங்கிகள் சங்கமும் ஒத்துக்கொண்ட 12.2 விழுக்காடு ஊதிய உயர்வை உடனடியாக வழங்காவிட்டால், வரும் மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று தினங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு மத்திய அரசும், இந்திய வங்கிகள் சங்கமும் செவிசாய்க்காவிட்டால் வரும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், நாள் ஒன்றுக்கு 2,500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!