நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துதல், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர், “நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் நுழைவதை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதே சமயம் இ-பாஸ் இல்லாமல் அனுமதியின்றி நுழைபவர்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ், "இ-பாஸ் இல்லாமல் சட்ட விரோதமாக நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்தால் தொற்று நோய் பரப்புதல் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவர். அதன்படி, மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எல்லைகளில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மேலும் அனுமதியின்றி உள்ளே நுழைவதை தடுக்க அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.