நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று நாமக்கல்லை அடுத்த ராசிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர்,
'கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய தகுதி உள்ள கூட்டணி அதிமுக கூட்டணிதான். திமுக கூறுவது வெற்று வாக்குறுதி மட்டுமே. நாமக்கல் மாவட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பெயரைச் சொல்லி அவருடைய ஆசிபெற்ற வேட்பாளர் என்று எங்களால் கூறமுடியும். ஆனால், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் ஆசிபெற்ற வேட்பாளர் என்று தனது கட்சி வேட்பாளரை ஈஸ்வரன் கூற முடியுமா?
தருமபுரி தொகுதியில் அன்புமணி தவிர வேறும் யாரும் கட்சியினர் இல்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளார். உன் கட்சியில் உன்னுடைய குடும்பம் தவிர யாருமே இல்லையா? மேடை நாகரிகத்தோடு பேசும் என்னை, இப்படி பேச வைத்தது திமுகதான். காவிரி, கோதாவரி இணைப்பு, நீர்மேலாண்மை போன்ற திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு இந்த இடத்தில் நான் உறுதி அளிக்கிறேன்' என்று வாக்குறுதி அளித்தார்.