நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரகூராம்பட்டியைச் சேர்ந்த செந்தில் முத்துக்குமார் (47), ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திங்கள்கிழமையன்று மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த செந்தில் முத்துக்குமார், தலைமையாசிரியர் உள்ளிட்ட சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இவர் மீது, பள்ளித் தலைமையாசிரியர் மாதேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஓவிய ஆசிரியர் செந்தில் முத்துக்குமாரை காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தினாரா என பரிசோதனை மேற்கொண்டு அதை உறுதிபடுத்தினர். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மது அருந்திவிட்டு பணிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் செந்தில் முத்துக்குமாரை பணியிடைநீக்கம் செய்து உத்திரவிட்டார்.