நாமக்கல் மாவட்டத்தில் பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பேசுகையில், "2020 - 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக, அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக “பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்” அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020 - 2021-ஆம் ஆண்டு முதல் 2024 - 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 விழுக்காடு மற்றும் மாநில அரசின் 40 விழுக்காடு நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
“ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி (POULTRY) உள்ளிட்ட பதப்படுத்துதல் சம்மந்தமான மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே, இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பேற உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.